குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் – ஸ்டாலின் அதிரடி அறிக்கை!

Share this News:

சென்னை (14 மார்ச் 2021): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் போன்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள்” எனக் குறிப்பிட்டு தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

2021 தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள – வாக்குறுதி 43-ல், “விவசாயிகளுக்கு எதிரான சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது” என்பதையும்; வாக்குறுதி 367-ல், “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 நிராகரிக்கப்படும். காட்டுப்பள்ளித் துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்பட மாட்டாது” என்பதையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் வாக்குறுதி 500-இல் நேர்ந்துள்ள எழுத்துப் பிழையைப் பின்வருமாறு சரி செய்து, படித்திடவும் கேட்டுக் கொள்கிறேன்

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

இலங்கையில் இருந்து வந்து, இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் நாடற்ற இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்.

மேற்கண்ட திருத்தங்களைப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐப் பொறுத்தவரை, அதை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்ததோடு மட்டுமின்றி – நானே வீதிகளில் இறங்கி ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று – அச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களிடம் திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்திருக்கிறது.

அத்துடன் நில்லாமல், தொடர்ந்து அந்தத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது. எனவே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு – அச்சட்டம் ரத்து செய்யப்படுவதற்குக் கழகம் அழுத்தமான குரல் கொடுக்கும் என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *