கொரோனா மேலும் பரவாமல் தடுக்க டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை!

Share this News:

சென்னை (25 ஏப் 2020): தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் மேலும் கோரோனா பரவாமல் தடுக்க டாக்டர் அன்புமணி ராமதாஸ் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இதுகுறித்த டாக்டர் அன்புமணி ராமதாஸின் அறிக்கை:

“நேற்று புதிதாக ஏற்பட்ட தொற்றுகளில் 72% சென்னையில் ஏற்பட்டவையாகும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தில் இதுவரை கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 1,755 பேரில், 452 பேர் அதாவது 25.75% சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 15- ஆம் தேதி முதல் நேற்று வரையிலான 10 நாட்களில் தமிழகத்தில் புதிதாகப் பரவிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 513 ஆகும். அவற்றில் 238 தொற்றுகள், அதாவது 46.39% சென்னையில் நிகழ்ந்தவை.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்து விட்ட நிலையில், சென்னையில் நோயைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். சென்னையில் மொத்தம் 140 பகுதிகள் தீவிர நோய்ப் பாதிப்பு பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிதாக ஏற்படும் தொற்றுகள் அதிகமாக இருக்கும் போதிலும், பாதிக்கப்பட்டோரில் பலருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், புதிய தொற்றுகள் அனைத்தும் தீவிர நோய்ப் பாதிப்பு பகுதிகளுக்குள் தான் ஏற்படுகின்றன என்பது தான் சமூகப் பரவல் குறித்த அச்சத்தைப் போக்குகிறது. ஆனாலும் நிலைமை மோசமாகத் தான் இருக்கிறது.

நோய் பாதித்த பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தீவிர நோய் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருப்பதன் மூலம் மொத்தம் 420 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை மாநகரில், நோய் பாதிப்பு உள்ள பகுதிகள் மட்டும் 2 சதுர கிலோ மீட்டராக சுருக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் கரோனா அறிகுறியுடன் காணப்படுபவர்களை உடனடியாகச் சோதித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதன் மூலம்தான் சென்னை மாநகரத்தை கரோனா வைரஸ் நோயின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியும்.

சென்னையில் கொரோனா வைரஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட 6 மண்டலங்களில் மட்டும் 40 லட்சம் பேர் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் சோதனை செய்வது சாத்தியமில்லை; தேவையும் இல்லை. மாறாக, தீவிர நோய் பாதிப்பு பகுதிகளில் உள்ள சில லட்சக்கணக்கான மக்களைத் தனிமைப்படுத்துவது, அறிகுறி உள்ளவர்களுக்குச் சோதனை செய்வது ஆகியவை தான் இன்றைய சூழலில் சாத்தியமானது ஆகும்.

இந்தப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டியதும் மிகவும் அவசியம் ஆகும். தீவிர நோய்ப் பாதிப்பு பகுதிகளில் உள்ளவர்களில் வாய்ப்புள்ளோரை அவர்களின் வீடுகளிலும், மற்றவர்களைச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள கட்டிடங்களிலும் தனிமைப்படுத்த வேண்டும்.

நோய் அறிகுறிகள் கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால், அவர்களை எங்கு, எப்போது, எத்தகைய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கான செயல்திட்டத்தை வகுத்து, விரைந்து செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் சென்னையில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்தப் பணிகள் முடிவடையும் வரை சென்னை மாநகர மக்கள் ஊரடங்கைத் தீவிரமாகக் கடைபிடித்து, நோய்த்தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *