சென்னை (25 ஏப் 2020): ஜோதிகா கோவில் குறித்து பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகையும் பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம், திமுகவையும் இதில் இணைத்து வம்புக்கு இழுத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு ஜோதிகா ஒரு விருது வழங்கும் விழாவில் பேசும்போது, “கோயிலுக்காக நிறைய காசு கொடுக்கிறீங்க.. பெயிண்ட அடித்து பராமரிக்கிறீர்கள். அதே போல ஸ்கூல்கலுக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள்..இவைதான் நமக்கு முக்கியம். அதனால் அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம்” என்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் மற்றும் இந்துத்வாவினர் ஜோதிகாவை வழக்கம்போல் அவர்கள் பாணியில் விமர்சிக்கத் தொடங்கி விட்டனர்.
ஜோதிகாவுக்கும் ஆதரவாக பேசிய பலர், இதே கருத்தை பிரதமர் மோடியும்தான் பேசியிருக்கிறார். ஏன் அவரை எதிர்க்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் ஜோதிகாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளர் நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“திமுக, திக, நாம் தமிழர், விசிக கட்சிகளின் கைக்கூலிகள் ஆதாரமற்ற கருத்துகளுடன் வருகின்றனர்… ஜோதிகா பேச்சை நியாயப்படுத்துபவர்கள் வெட்கக்கேடானவர்கள்.. இதற்கு நடிகை ஜோதிகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்துக்கள் என்னவோ, சமத்துவத்திற்கு தயாராகத்தான் உள்ளனர்.” என்று பதிவிட்டுள்ளார்.