பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி ஐந்து முக்கிய பரிந்துரைகள்!

Share this News:

புதுடெல்லி (25 ஏப் 2020): நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு ஐந்து முக்கிய பரிந்துரைகளை வைத்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக மே 3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்தார். தொடர்ந்து, வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஊரடங்கு திட்டமிடப்படாத ஒன்று என காங்., விமர்சனம் செய்து வருகிறது. மத்திய அரசின் செயல்பாடுகளையும் குறை கூறி வருகிறது.

இந்நிலையில் காங்., இடைக்கால தலைவர் சோனியா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து கடந்த 5 வாரங்களாக பல்வேறு சவால்களை சந்தித்துள்ளோம். கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில், நாட்டின் பொருளாதாரத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதனை கவனத்தில் கொள்ளாமல் விட்டால், மிகப்பெரும் வீழ்ச்சியை சந்திக்க வேண்டி வரும். என்று குறிப்பிட்டுள்ள சோனியா காந்தி கடித்தத்தில், அரசுக்கு 5 பரிந்துரைகளையும் அவர் வழங்கி உள்ளார்.

அவையாவன:

* சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்குகு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான சம்பளப் பாதுகாப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். இது அவர்களின் வேலைவாய்ப்பை காப்பதுடன், பொருளாதார பிரச்னைக்கும் உதவும்.

* கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், ரூ.1 லட்சம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இத்துறைக்கு உடனடி பணப்புழக்கத்தை வழங்குவதற்கும், போதுமான மூலதனம் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இது அவசியம்.

* ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, அனைத்து வங்கிகளும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்குத் தேவையான கடனுதவியை முறையாக வழங்க வேண்டும். அவர்களுக்கு உதவ 24 மணி நேர ஹெல்ப் லைன் வசதி செய்து தர வேண்டும்.

* கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான, 3 மாத கால அவகாசத்தை விடக் கூடுதலான அவகாசம் வழங்க வேண்டும். அவர்களுக்கு வரி தள்ளுபடி, வரி குறைப்பு செய்வது குறித்து அரசு ஆராய வேண்டும்.

* அடமானம் மற்றும் மார்ஜின் வரம்புகளை காரணமாக்கி அவர்களுக்கு கடன் வழங்காமல் இருக்கக்கூடாது. இதனை அரசு கவனிக்க வேண்டும்.


Share this News:

Leave a Reply