சேலம் (09 பிப் 2020): சேலம் வாழப்பாடியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிரிக்கெட் விளையாடினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 16 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் புதிய கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) திறந்து வைத்தார்.
புதிய கிரிக்கெட் மைதான திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாதெமி இயக்குநருமான ராகுல் டிராவிட், முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ரூபா குருநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மின்சாரம், மதுவிலக்கு-ஆயத்தீா்வைத் துறை தங்கமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோரும் பங்கேற்றனர்.
வாழப்பாடியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிரிக்கெட் விளையாடினார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பந்துவீச, முதல்வர் பேட்டிங் செய்தார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.