கோவை (09 பிப் 2020): ஐந்து வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் காமராஜபுரத்தில் உள்ள ஒரு மர குடோனில் கூலி வேலை செய்து வருகிறார்.
அதே குடோனில் ஒரு தம்பதியினர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (08/02/2020) அந்த தம்பதியினர் தங்களின் 5 வயது சிறுமியுடன் வேலைக்கு வந்துள்ளனர். பின்பு சிறுமியை தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் விளையாட விட்டு வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த ஆனந்த் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாகக் கூறி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமியின் அழும் சத்தத்தைக் கேட்டு பெற்றோர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது ஆனந்தின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிறுமியை மீட்ட பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் ஆனந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.