புதுடெல்லி (07 ஜூலை 2021): டெல்லியில் அமைச்சர் துரைமுருகனை தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏக்கள் சந்தித்த நிலையில், “தமிழ்நாட்டைவிட்டு தாண்டினால் எல்லாம் ஒன்றுதான்” என தெரிவித்துள்ளார்.
அண்மையில் தென்பெண்ணை ஆற்றின் மார்க்கண்டேய நதி குறுக்கே கர்நாடக அரசு கட்டியிருந்த யார்கோல் அணை விவகாரம் மற்றும் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார்.
இது விவாதத்திற்குள்ளான நிலையில், நேற்று (06.07.2021) டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். 30 நிமிடம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், “உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய டிஎம்சியில் 8 டிஎம்சி கூட கிடைக்க வில்லை.
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என அமைச்சரை கேட்டுக் கொண்டேன். தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல், முன்கூட்டியே அறிவிக்காமல் தடாலடியாக ஒன்றிய அரசிடமிருந்து டிபிஆர் வாங்கியுள்ளனர்.
டிபிஆர் வாங்கினால் மட்டுமே அணை கட்ட முடியாது. உடனடியாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்” என்றார்.
பிறகு தமிழக பாஜக எம்.எல்.ஏ.க்கள், தமிழ்நாடு இல்லத்தின் வாயிலில் துரைமுருகனைச் சந்தித்து பேசினர்.
அப்போது பேசிய துரைமுருகன், “தமிழ்நாட்டைவிட்டு தாண்டினால் எல்லாம் ஒன்றுதான்” என தெரிவித்தார்.