சென்னை (06 ஏப் 2020): சென்னை எண்ணூரில் கொரோனாவை எதிர்த்து தீபம் ஏற்றியபோது விபத்து ஏற்பட்டு மளமளவென தீ பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் இதுவரை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதனால் இந்த வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் கொரோனா வைரஸுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒற்றுமையை வலியுறுத்தியும் ஏப்ரல் 5, 2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் மூலம் ஒளியேற்ற வேண்டும், அதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனை அடுத்து நாடெங்கும் பலர் ஞாயிற்றுக்கிழமை இரவு தீபம் ஏற்றினர். சென்னை எண்ணூர் பகுதியிலும் விளக்குகளை அணைத்துவிட்டு அகல்விளக்கு மெழுகுவர்த்தி, டார்ச் லைட் மூலம் ஒளி ஏற்படுத்தும் நிகழ்வில் பலர் பங்கேற்றனர். அப்போது சிலர் தீபாவளிபோல் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் வானில் சென்று வெடிக்கும் பட்டாசுகளை வெடிக்கச் செய்தபோது எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு அருகே உள்ள மனையில் ராக்கெட் பட்டாசு ஒன்று கீழே விழுந்து தீப்பற்றியது.
தமிழ்நாடு கனிமவள நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த இடத்தில் காய்ந்து போன புற்கள், மரங்கள் உள்ளிட்டவை புதர் போல் மண்டியிருந்தன. அதனால் அப்பகுதியில் உடனே தீப்பற்றி அது மளமளவென எரியத் தொடங்கியது. மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயினால் ஏற்பட்ட புகை மண்டலம் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சுற்றி வளைத்தது. இதனால் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதையடுத்து மக்கள் வீட்டைவிட்டு அலறிக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இது குறித்த தகவலறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து எண்ணூர் காவல் நிலைய காவலர்கள் விசாரனை நடத்தி வருகின்றனர்.