ராமநாதபுரம் (31 மே 2021): நடிகை அளித்த பாலியல் புகாரின்பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு அதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார்.
நாடோடிகள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை சாந்தினி, கடந்த வெள்ளிக்கிழமை பரபரப்பு புகார் அளித்தார். அதில், ‘‘நான் மலேசியா சுற்றுலா வளர்ச்சி கழக தூதரகத்தில் வேலை செய்தபோது அடிக்கடி பணி நிமித்தமாக இந்தியா வந்து செல்வது வழக்கம். அப்போது, 2017ம் ஆண்டு தமிழக தொழில் நுட்பத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த அதிமுகவை சேர்ந்த ராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டன், சுற்றுலா வளர்ச்சி துறை சம்பந்தமாக என்னை பார்க்க விரும்புவதாக பரணி என்பவர் மூலம் தெரிவித்தார்.
அதன்படி நான் கடந்த 3.5.2017 அன்று அமைச்சர் மணிகண்டனை அவரது வீட்டில் சந்தித்து பேசினேன். அப்போது எனது செல்போன் நம்பரை அவர் பெற்றுக்கொண்டார். பின்னர், நான் அழகாக இருப்பதாகவும், என்னை மிகவும் பிடித்துவிட்டதாகவும், என்னை சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார். அதன்படி நான் அவருடன் ஒரே வீட்டில் கணவன்-மனைவியாக பெசன்ட் நகர் மதுரிதா அபார்ட்மென்டில் வசித்து வந்தேன். நாங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்ததன் பலனாக நான் 3 முறை கருவுற்றேன். நான் கருவுற்ற 3 முறையும் அவரது நண்பரான டாக்டர் அருண் என்பவர் கோபாலபுரத்தில் நடத்தி வரும் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்தார். மாதவிடாய் காலத்தில் என் வீட்டில் தங்கும் போது என்னை பலவந்தப்படுத்தி அமைச்சர் மணிகண்டன் மிருகத்தனமாக பாலியல் உறவு கொள்வார். எதிர்த்து கேட்ட என்னை 2 முறை அடித்து என் கண்களை சேதப்படுத்தினார்.
நான் குளிக்கும் சமயம் எனக்கு தெரியாமல் எடுத்த ஆடையில்லாத போட்டோவை எனக்கு டெலிகிராம் மூலம் அனுப்பி மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த நான் அவரை தொலைபேசியில் அழைத்த போது என் தொலைபேசியை எடுக்காமல் பரணி என்பவர் மூலம் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே என்னை திருமணம் செய்வதாக கூறி 5 ஆண்டுகள் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி எனது அந்தரங்க படங்களை வைத்து மிரட்டல் விடுத்து வரும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பரணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\” என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின்படி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், அடையார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐபிசி 313 (பெண்ணின் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி கருவை கலைத்தல்), 323 (அடித்து காயம் ஏற்படுத்துதல்), 417 (நம்பிக்கை மோசடி),376 பாலியல் பலாத்காரம் (உறுதியானால் ஆயுள் தண்டனை), 506(i)(கொலை மிரட்டல்), 67(எ)தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு உதவிய பரணி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் மீது பாலியல் பலாத்காரம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய ராமநாதபுரத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.