பெரம்பலூர் (14 ஜூலை 2022) : அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார்.
பெரம்பலுார் மாவட்டம், மேல உசேன் நகரம் கிராமத்தில், 1.28 கோடி ரூபாய் மதிப்பிலான மறு சீரமைப்பு குடிநீர் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்றார்.பின், நிருபர்கலிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் அறிவித்தபடி, அரசு போக்குவரத்து கழகத்துக்கு புதிதாக, 2,000 பேருந்துகள் வாங்குவதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக நடைபெற்ற ஐந்தாம் கட்ட பேச்சில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு சில கோரிக்கைகள் மட்டும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று, விரைவில் தீர்வு காணப்படும்.அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சென்னையில் இயக்கப்பட்ட பெரும்பாலான மினி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
எந்த வழித்தடங்களில் மினி பேருந்துகள் தேவை என்பதை கண்டறிந்து, இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் கணக்கெடுக்கப் படுகின்றன. பணி முடிந்ததும், காலியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.