சென்னை (23 ஏப் 2020): கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனுவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் பெயர் மற்றும் சார்ந்துள்ள பகுதியை அரசு இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், நிர்மல்குமார் அமர்வு முன்பு, வீடியோ கான்பரன்சிங் மூலமாக விசாரணைக்கு வந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவின்-படி ஒருவரின் விவரங்களை வெளியிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், பாதிக்கப்பட்டவர்களின் பெயரை வெளியிட்டால் சமூக பிரச்சனை ஏற்படும் என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.