முதலில் சியோனிச சித்தாந்தத்திற்கும் இந்துத்துவ சித்தாந்தத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை அறிந்து கொள்ளலாம்.
சியோனிசம் : சியோனிசம் என்ற சித்தாந்தம் ”யூத தேசிய இயக்கம்” என்ற அர்த்தத்தைத் தரும். தேசமே இல்லாமல், பல்வேறு தேசங்களில் சிதறிக்கிடந்த யூதர்கள் தங்களுக்காக ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட இயக்கமாகும்.
ஆக, சியோனிசத்தின் அடிப்படை நோக்கமே பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்களுக்காக உருவாக்க வேண்டும் என்பதாகும்.
இந்துத்துவம் : இந்துத்துவம் என்ற சித்தாந்தம் இந்துக்களுக்கான (பிராமணியர்களுக்கான) அகண்ட நாட்டை உருவாக்க வேண்டும் என்பதாகும்.
இந்தியாவை ஆரிய பார்ப்பனர்களுக்கான இந்து நாடாக மாற்ற வேண்டும் என்பது தான் இந்துத்துவாவின் அடிப்படை நோக்கமாகும்.
மொழி : ஹீப்ருவும் சமஸ்கிருதமும்
சியோனிசம் என்ற பயங்கரவாத சித்தாந்தத்தை நிறைவேற்றுவதற்காக யூதர்கள் மேற்கொண்ட மிக முக்கியமான நடவடிக்கை ஹீப்ரு மொழியை புதுப்பித்தலாகும்.
யூதர்களின் ஹீப்ரு : யூதர்களின் மொழி ஹீப்ரு. தவ்ராத் (தோரா) வேதம் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டதாக யூதர்கள் நம்புகின்றனர். ஆரம்பத்தில் யூதர்களின் மொழி என்பதாகவே ஹீப்ரு இருந்தது. இது யூதர்களின் தலையாய அடையாளமாக கருதப்படவில்லை. ஆரம்பத்தில் மத நூல்களுக்கு மட்டுமே ஹீப்ரு மொழி பயன்படுத்தப்பட்டது.
19ஆம் நூற்றாண்டில் தான் யூதர்கள் ஹீப்ரு மொழியை தங்களுடைய முக்கிய அடையாளமாக கருதத் தொடங்கினர். யூத குலம் அழியாமல் தடுக்க, யூதர்களுக்கென ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்ள ஹீப்ரு மொழி மிகவும் முக்கியம் என்று கருதத் தொடங்கினர்.
1880ஆம் ஆண்டில் எப்படியாவது பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் என்கிற ஒரு தேசத்தை உருவாக்கியே தீருவது என்று முடிவு செய்ததும், கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனத்தில் ஹீப்ருவை வளர்ப்பதற்காக ஹீப்ரு மொழி பள்ளிக்கூடங்களைத் திறந்தார்கள். 1913ஆம் வருடம் பாலஸ்தீனத்திலுள்ள பள்ளிகளில் ஹீப்ருவே பயிற்று மொழி என்கிற அளவிற்கு அதன் தாக்கம் மிகுந்திருந்தது. 1948ல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனை இஸ்ரேல் என்ற நாடாக யூத சியோனிச பயங்கரவாதிகளால் அறிவிக்கப்பட்ட போது அதன் தேசிய மொழியாக ஹீப்ரு இருக்கும் என்பதையும் சேர்த்தே அறிவித்தனர். இதே வழிமுறையைத் தான் இந்துத்துவாவினரும் கையிலெடுத்துள்ளனர்.
இந்துத்துவாவின் சமஸ்கிருதம் : இந்துத்துவாவினரின் வேதமான ரிக் வேதம் எழுதப்பட்ட மொழி சமஸ்கிருதம். ஆரம்பத்தில் சமஸ்கிருதம் வேதத்திற்குரிய மொழியாக மட்டும் தான் இருந்தது. வேதத்தை ஓதக் கூடியவர்கள் தான் சமஸ்கிருதத்தை பயன்படுத்தினர். உயர்சாதியினர் அல்லாதவர்கள் வேதத்தை ஓதக் கூடாது என்று தடுக்கப்பட்டிருந்த போது அவர்களுக்கு எப்படி சமஸ்கிருதம் தெரிந்திருக்கும்.
ஆரம்பத்தில் சமஸ்கிருத மொழி சிலரால் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டது (தற்போதும் அதே நிலை தான் நீடிக்கிறது). ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்குப் பிறகு இந்துத்துவ சித்தாந்தத்தை நோக்கி அவர்கள் ஒவ்வொரு அடியாக முன்னெடுத்துச் செல்கிறார்கள். அதில் சமஸ்கிருதத்தை நோக்கிய முன்னெடுப்பு மிக முக்கியமானது.
பாஜகவின் 2019ஆம் ஆண்டிற்கான தேர்தல் அறிக்கையில் ”நாடு முழுவதும் 200 கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகள் கட்டப்படும். சமஸ்கிருத மொழியைப் பரவலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பள்ளிகளில் சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்காக நாடு முழுவதும் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க 100 கல்வியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
யூதர்கள் மேற்கொண்ட அதே நடவடிக்கையை நாங்களும் மேற்கொள்வோம் என்பதை வெளிப்படையாகவே அறிக்கையின் மூலமாக வெளியிட்டார்கள்.அதன் தொடர்ச்சியாக தேர்தலில் வெற்றிப் பெற்றதற்குப் பிறகு 2019ஆம் வருடம் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி ”சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா 2019” என்ற மசோதாவை தாக்கல் செய்து சட்டமாக நிறைவேற்றினார்கள்.
இந்த சட்டத்தின் மூலம் புதுடில்லியிலுள்ள ராஷ்டிரிய சமஸ்கிருத சனஸ்தான், ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீத் மற்றும் திருப்பதியிலுள்ள ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீத் ஆகிய மூன்று பல்கலைக் கழகங்கள் மத்திய பல்கலைக் கழகங்களாக மாற்றப்படுகின்றன.
மத்திய பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் மேற்கூறப்பட்ட மூன்று பல்கலைக் கழகங்களும் என்ன செய்யும்?
1)சமஸ்கிருத மொழியை மேம்படுத்துவதற்கான அறிவைப் பரப்புதல் மற்றும் மேம்படுத்துதல்
2)மனிதநேயம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த சமஸ்கிருத படிப்புகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்தல் ஆகியவை இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
அதே போல் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்காக டெல்லியில் ”தேசிய சமஸ்கிருத மையம்” என்பதை நிறுவியிருக்கிறார்கள். மேலும், 2017 முதல் 2019 வரையிலுள்ள மூன்று ஆண்டுகளில் மொத்தம் 643.84 கோடி நிதியை சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்காக ஒதுக்கியிருக்கிறார்கள். ஆனால் மூத்த மொழியான செம்மொழி தமிழுக்கு 3 ஆண்டுகளில் மொத்தம் 22.94 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமே சமஸ்கிருத மொழிக்கு அவர்கள் வழங்கும் முக்கியத்துவத்தை விளங்க போதுமானதாகும்.
இவ்வாறு யூதர்களின் சியோனிச கொள்கைகளை அப்படியே அடியொற்றி நடக்கக் கூடியவர்களாக இந்துத்துவாவினர் திகழ்கின்றனர்.
ஒப்பீடு தொடரும்.
பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5