மதம் கடந்த நட்பு – முகமதுஅசன் ஆரிபின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய ராஜசேகர்!

Share this News:

வேதாரண்யம் (31 மே 2020): எல்லா மதமும் மனிதத்தைத்தான் போதிக்கின்றன என்பதற்கு மற்றுமொரு உதாரணம் அப்துல் ரஹீம், ராஜசேகர் நட்பு.

வங்க தேசத்தை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் இவர் ஓமனில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் ஒமனில் முத்துப்பேட்டை அருகே உள்ள வேதாரண்யத்தை சேர்ந்த ராஜசேகரும் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அப்துல் ரஹீமின் சகோதரி மகன் 9 வயது முஹம்மது அசன் ஆரிஃப் என்ற சிறுவனின் இதயத்தில் ஓட்டை உள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஏழ்மை காரணமாக பெற்றோரால் ஆரிஃபுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை.

இதனை அறிந்த ராஜசேகர், கடந்த மார்ச் மாதம் ஊருக்கு வந்தார். அப்போது அப்துல் ரஹீமின் மருமகனையும் இந்தியா அழைத்து வரவேண்டி அப்துல் ரஹீமிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுவன் ஆரிப், தாய் மோஹசனா பேகம், தாய் மாமா அப்துல் ரஹீம் ஆகியோர் கடந்த மார்ச் மாதத்தில் வேதாரண்யத்தில் உள்ள ராஜசேகர் வீட்டுக்கு வந்தனர். வேதாரண்யத்தை அடுத்த செம்போடையில் செயல்படும் தனியார் மருத்துவமனை இயக்குநர் மற்றும் மருத்துவர் சுப்பிரமணியனிடம் சிறுவனை அழைத்து சென்றனர்.

இதனை சரி செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில், கோவை தனியார் மருத்துவமனைக்கு சென்று உரிய அறுவை சிகிச்சைஅளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான செலவினை தோப்புத்துதுறையை சேர்ந்த தொழிலதிபர் சுல்தானுல் ஆரிபா ஏற்றுக்கொண்டார். இதேபோல் வேதாரண்யம் டிஎஸ்பி சபியுல்லா, சமூக ஆர்வலர் ரஹ்மத்துல்லா மற்றும் ஒரு சில தன்னார்வலர்கள் உதவியோடு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு நடந்தது.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதால் அறுவை சிகிச்சை தாமதமானது. இதனால், சிறுவனுடன் அவனது தாய், மாமா மூவரும் வேதாரண்யத்தில் உள்ள ராஜசேகர் வீட்டில் தங்கியிருந்தனர்.

இதையடுத்து, கோவையில் சிறுவன் ஆரிப்புக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து வேதாரண்யத்தில் தங்கியுள்ள இவர்கள் விரைவில் தாயகம் செல்லவுள்ளனர்.

கையில் பணமில்லாவிட்டாலும், நாடுவிட்டு நாடு அழைத்து வந்து இதய சிகிச்சைக்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்ததோடு, இத்தனை நாட்கள் சிறுவனின் குடும்பத்தினரையும் வீட்டில் தங்க வைத்து உதவியது மிகப்பெரிய உதவி என்று ராஜசேகர் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.


Share this News: