உணவு, குடிநீர் கிடைக்கவில்லை – உக்ரைனிலிருந்து வந்த தமிழக மாணவர் தகவல்!

Share this News:

தேனி (26 பிப் 2022): உக்ரைனில் மாணவர்களுக்கு குடிநீரோ உணவோ கிடைப்பது இல்லை என்று உக்ரைனிலிருந்து தமிழகம் வந்துள்ள தேனீ மாணவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவ வீரர்கள் போர் தொடுத்து வருகின்றனர். பதற்றமான சூழலுக்கு நடவே தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் போர் துவங்குவதற்கு சற்று முன்பு உக்ரைனிலிருந்து தமிழகம் வந்துள்ள தேனி மாணவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள தகவலில் “உக்ரைன் கீவ் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். 3 ஆம் ஆண்டு படித்து வந்தேன். என்னுடன் தேனி மாவட்டம் கோம்பையைச் சேர்ந்த கோகுல், ஜெய் ஆகாஷ், ஷாரு அஸ்வின், கோபிகிருஷ்ணா, ரெனிடா, கரூரை சேர்ந்த லோகேஸ்வரன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சேலத்தைச் சேர்ந்த தேவ் ஆகிய 9 பேர் உக்ரைனில் இருந்து திரும்பினோம்.

உக்ரைனில் போர் தொடங்குவதற்கு முன்பு, பல்கலைக்கழகத்தில் இருந்து போர் தொடங்க வாய்ப்புகள் குறைவு என்றும், தேவைப்பட்டால் சொந்த நாட்டுக்கு செல்லலாம் அல்லது இங்கேயே இருந்து படிப்பை தொடரலாம் என்றும் தெரிவித்தனர். இதனால், பல மாணவ-மாணவிகள் படிப்பு முக்கியம் என்பதால் சொந்த ஊருக்கு திரும்பாமல் கல்லூரிக்கு சென்றனர். போர் தொடங்கிய நாள் வரை வகுப்புகள் நடந்தன. நாங்கள் கடந்த 22 ஆம் தேதியே உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் இருந்து ரயில் மூலம் லிவிவ் பகுதிக்கு புறப்பட்டோம். அங்கிருந்து துருக்கியில் உள்ள இஸ்தான் புல் விமான நிலையத்துக்கு 23 ஆம் தேதி சென்றோம். பின்னர் அங்கிருந்து கத்தாரில் உள்ள தோகா விமான நிலையம் வந்து, அங்கிருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்தோம். 3 விமானங்கள் மாறி கோழிக்கோடு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து பஸ்சில் சொந்த ஊருக்கு திரும்பி வந்தோம்.

நாங்கள் வந்தது தான் கடைசி விமானம் என்று நினைக்கிறேன். விமானத்தில் வந்து கொண்டு இருக்கும் போது தான் போர் தொடங்கி குண்டு வீசத் தொடங்கிய தகவல் கிடைத்தது. என்னோடு படிக்கும் சக மாணவர்களை தொடர்பு கொண்டேன். அவர்கள் பல்கலைக்கழகங்களில் உள்ள பாதாள அறைகள் மற்றும் மெட்ரோ ரயிலுக்கான சுரங்க பகுதிகளில் தங்கி இருப்பதாக தெரிவித்தனர்.

அங்கு அவர்கள் உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். உக்ரைனில் தண்ணீரை ஏ.டி.எம். போன்ற மிஷின்களின் மூலம் தான் பெற முடியும். அந்த மிஷின் அனைத்தும் செயல்படாமல் உள்ளன. போர் காரணமாக தண்ணீர், உணவு இன்றி தவிப்பவர்களுக்கு அரசு உடனடியாக உதவிகள் செய்ய வேண்டும். போன்களுக்கு சார்ஜ் போடக் கூட வழியின்றி பல மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் பேச முடியாத நிலையில் உள்ளனர். மெட்ரோ சுரங்கப்பாதையில் பதுங்கி இருக்கும் மாணவிகள் கழிப்பறை கூட செல்ல முடியாமல் தவிப்பதாக கூறுகிறார்கள்.

எங்களோடு உக்ரைனில் இருந்து புறப்பட்டு இஸ்தான் புல் விமான நிலையத்துக்கு வந்தவர்களில் 2 பேர் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டு தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் தான் விமானத்தில் பயணம் செய்ய முடியும். அதற்கு தடுப்பூசி சான்றிதழ் எண் போன்ற விவரங்கள் தேவை. அதுபோன்ற விவரங்களை முழுமையாக கொடுக்க இயலாமல் 2 பேர் அங்கு நிறுத்தப்பட்டனர். அவர்கள் நிலை என்ன ஆனது என தெரியவில்லை” என்றார்.

தேனி பங்களாமேடு திட்டச்சாலையைச் சேர்ந்த சரவணன் மகன் ரோகித் குமார்(22). இவர் உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் பட்டப்படிப்பு 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்துள்ள நிலையில் கார்கிவ் நகரை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மாணவன் ரோகித்குமார், உக்ரைனில் தான் வசிக்கும் இடத்தில் உள்ள நிலவரம் குறித்து ஒரு வீடியோ பதிவு செய்து தனது பெற்றோருக்கு அனுப்பி உள்ளார். அதில், “நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனாலும் பயமாக இருக்கிறது. நேற்று இங்கு தொடர்ந்து குண்டுவெடிப்பு நடந்தது. நாங்கள் பாதுகாப்பான இடத்தில் தான் இருந்தோம். எங்களுக்கு உணவு கொடுத்தார்கள்.

காலையில் தான் பாதாள அறையில் இருந்து வெளியே வந்தோம். இருந்தாலும் மீண்டும் குண்டு வீச்சு நடந்தால் பாதுகாப்பாக இருக்க ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். எங்களை எல்லைக்கு கூட்டிச்சென்று எப்போது இந்தியாவுக்கு அழைத்து செல்வார்கள் என்ற விவரம் தெரியவில்லை. நான் படிக்கும் பல்கலைக்கழகத்தில் மட்டும் 200 தமிழ் மாணவர்கள் இருக்கிறோம்.

இன்னும் அரசிடம் இருந்து முறையான உத்தரவு வரவில்லை. உத்தரவு வந்தால் எங்களை எப்படி இங்கிருந்து அழைத்துச் செல்வது என்ற விவரத்தை சொல்வதாக கூறி இருக்கிறார்கள். அது மட்டும் எங்களுக்கு வேகமாக கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்றார்.


Share this News:

Leave a Reply