சென்னை (03 ஜூன் 2020): திமுக-வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில்,1,286 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 11 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 208 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் திமுக-வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் , நேற்று இரவு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறலோடு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்துப்பார்த்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் முதன்முறையாக எம்.எல்.ஏ., ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.