சென்னை (25 பிப் 2020): டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிவரும் இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா குண்டர்கள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
“சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். சட்டங்களை எதிர்த்து கடந்த இரண்டு மாதங்களாக தலைநகர் டெல்லியில் அமைதியான முறையில், ஜனநாயக வழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களில் அவ்வப்போது சங்பரிவார் கும்பலைச் சேர்ந்தவர்கள் அமைதிவழி போராட்டகாரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களின் குரூரத்தை வெளிப்படுத்தி வரும் சூழலில் நேற்று முதல் டெல்லியில் திட்டமிட்டு நடைபெற்றுவரும் கலவரத்தில் முஸ்லிம்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்துவா? முஸ்லிமா? என மதத்தைக் கேட்டு கண்மூடித்தனமாகத் தாக்குவதும், முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களை தேடித்தேடி தீயிடப்படும் காட்சிகளும் மீண்டும் ஒரு குஜராத்தை நினைவுபடுத்துகிறது.
இந்த கலவரங்களை படம் பிடிக்கச்சென்ற ஊடக நண்பர்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி வேதனை அளிக்கிறது.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் தொடங்கி பா.ஜ.கவின் அமைச்சர்களும், தலைவர்களும் தொடர்ச்சியாக மேற்கொண்ட வெறுப்பு பிரச்சாரமே இந்த கலவரத்திற்கு காரணம். காவல்துறையினருக்கு கெடு விதித்து கலவரத்தை துண்டிவிட்ட முன்னாள் எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டின் தலைநகரில் இதுபோன்ற பெரிய கலவரம் நடைபெற்றுவரும் சூழலில் மத்திய அரசு அதனை தணிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் ஒருசாரார் மீது மட்டும் பழி சுமத்தி வேடிக்கை பார்த்து வருவது கண்டனத்திற்குரியது. இக்கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோருகிறேன்.”
இவ்வாறு ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்.