தமிழக காவல்துறைக்கு ஜவாஹிருல்லா பாராட்டு!

Share this News:

சென்னை (18 டிச 2022): தமிழகத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 வாயிலாக ஐந்து நாட்களில் தமிழக காவல்துறை முன்னெடுத்திருக்கும் செயல்பாடுகள் பாராட்டுதலுக்குறியது என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக அதிரடி நடவடிக்கை கஞ்சா வேட்டை 3.0 என்ற பெயரில் தமிழகம் முழுவதும், 12.12.2022 அன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து நாள்களில் 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

15 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதிரடி வேட்டையில் இறங்கி இருக்கும் காவல்துறையின் இந்த செயல்பாடுகள்ளை நெஞ்சார பாராட்டுகிறேன்.

அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்ட விரோதமாக அவர்கள் வாங்கிக் குவித்த சொத்துகளையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்கிற செய்தி வரவேற்கத்தக்கது.

தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு தமிழகத்தில் இனிமேல் கஞ்சாவே இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.

வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் போதைப் பொருட்களை தடுப்பதற்கு தீவிர முன்னெடுப்புகளை தமிழக காவல்துறை மேலும் விழிப்புடன் செய்ய வேண்டும்.

காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு அவர்களின் பெரு முயற்சிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply