சென்னை (18 மே 2020): டெல்லியில் சிக்கித் தவித்த தமிழக தப்லீக் ஜமாஅத்தினர் ஊர் திரும்ப உதவிய எம்பி ரவீந்திரராத் உள்ளிட்ட அனைவருக்கும் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
சுமார் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு இன்று டெல்லியில் முழு முடக்கத்தில் பயணிக்க இயலாத நிலையில் இருந்த தமிழக தப்லீக் சகோதரர்களும் சகோதரிகளும் தமிழகம் திரும்பினர். நேற்று இரவு 11 மணியளவில் அவர்கள் தாம்பரம் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
சென்னை தாம்பரத்தில் இறங்கிய 214 பேர் (இவர்கள் சென்னை,செங்கை. காஞ்சி, திருவள்ளூர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி. திருவண்ணாமலை. வேலூர். ராணிப்பேட்டை. திருப்பத்தூர். கிருஷ்ணகிரி. தர்மபுரி, காரைக்கால். புதுச்சேரி மற்றும் நெல்லூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்) செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் உள்ள முஹம்மது சதக் கல்வி வளாகத்தில் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.
டெல்லியிலிருந்து வந்த ரயில் அடுத்து திருச்சி வந்தடைந்துள்ளது. இங்கு 310 பேர் (இவர்கள் திருச்சி. புதுக்கோட்டை. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டணம். கடலூர், கரூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை. தேனி, சிவகங்கை, நாமக்கல், சேலம், ஈரோடு. திருப்பூர், கோவை) மாவட்டங்களை சேர்ந்தவர்கள்) திருச்சி அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளார்கள்.
டெல்லி ரயில் அடுத்து திருநெல்வேலியைக் காலை 10 மணியளவில் சென்றடையும். அங்கு 70 பேர் (இவர்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி. தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்) பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட உள்ளார்கள்.
டெல்லியில் பெரும் சோதனைகளுக்கு ஆட்பட்டு தாயகம் திரும்பும் இவர்களை தனிமைப்படுத்த தங்கள் கல்லூரி வளாகங்களைத் தந்துள்ள சென்னை முஹம்மது சதக் கல்வி நிறுவனங்கள். திருச்சி அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரி மற்றும் பாளையங்கோட்டை சதக்கத்துலலாஹ் அப்பா கல்லூரி ஆகிய மூன்று கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. சென்னையில் தங்கள் கல்லூரி வளாகத்தைத் தனிமைப்படுத்துதலுக்கு அளித்ததுடன் ரயில் நிலையத்திலிருந்து தப்லீக் சகோதரர்களை அழைத்துச் செல்ல தமது கல்லூரி பேருந்துகளை வழங்கிய முஹம்மது சதக் கல்வி நிறுவனத்தாருக்கும். கோட்டூர்புரம் யூனிடி பப்ளிக் ஸ்கூல் நிறுவனத்தாருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றி.
டெல்லியில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் ரயில் புறப்பட்ட போது தப்லீக் அன்பர்களுக்கு ஜம்யிய்த்துல் உலமா ஹிந்த். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,டெல்லி தப்லீக் ஜமாஅத் சகோதரர்கள் உணவு பொட்டலங்கள் வழங்கினர். வழியில் போபாலிலும், விஜயவாடாவிலும் ரயிலில் பயணித்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. சென்னையிலிருந்து திருச்சி மற்றும் திருநெல்வேலிக்கு பயணித்த தப்லீக் அன்பர்களுக்குத் தாம்பரத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது.
டெல்லியிலிருந்து வந்த ரயிலில் தப்லீக் சகோதரர்கள் மட்டுமின்றி டெல்லியில் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிமல்லாத சகோதரர்களும் இதே ரயிலில் பயணித்தார்கள்.
அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்கத் தான் மட்டும் புசித்திருப்பவன் உண்மையான முஸ்லிம் இல்லை என்ற நன்மொழிக்கேற்ப தப்லீக் தோழர்கள் தங்கள் சக முஸ்லிமல்லாத பயணிகளுக்கும் உணவைப் பகிர்ந்து வழங்கி மகிழ்ந்தார்கள்.
டெல்லியில் தவித்துக் கொண்டிருந்த தப்லீக் தோழர்களைத் தமிழகம் திரும்ப அழைத்து வரத் தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் பல்வேறு வகையில் பாடுபட்டனர். இந்த பணிகளில் மகுடம் வைத்து இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளாத சில சகோதரர்களும் சகோதரிகளும். அவர்களுக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காக அவர்களில் சிலரை நான் இங்குக் குறிப்பிடுகிறேன். புரபசெனல் மீரான் அண்ணன், வழக்கறிஞர் அம்ஜத் கான், இப்னு சவூத், மவ்லவி மன்சூர் காஷிபி, ரியாஸ் நவ்ஷாத், நிசார் அஹ்மது, பாத்திமா முஸப்பர். பாகிரா. என்று அந்த பட்டியல் நீளுகின்றது. இவர்கள் அரசின் பல்வேறு தரப்பு அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்தார்கள்.
டெல்லியிலும் இதர மாநிலங்களிலும் தவித்துக் கொண்டிருந்தவர்களுடனும் அவர்கள் தொடர்பிலிருந்தார்கள். மனோதத்துவ குழுவினர் மனநிலை ஆலோசனைகளை வழங்கி கொண்டிருந்தார்கள். என்னுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து பல்வேறு வடிவங்களில் ஒன்றிணைந்து செயல்பட்டோம்.
டெல்லியிலும் இதர மாநிலங்களிலும் உள்ளவர்கள் பற்றிய விபரங்கள் இணைய தளத்தில் பதிவேற்ற இரவு பகல் பாராது இக்குழுவினர் உழைத்தார்கள். இதில் எனது தனிப்பட்ட அனுபவத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். குஜராத்திற்கு தப்லீக் பணிக்காகச் சென்றிருந்த சேலம், ராணிப்பேட்டை மற்றும் வேலூரைச் சேர்ந்த 50 தப்லீக் சகோதரர்கள் பேருந்தில் வரும் போது தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். தமிழக அரசு இணைய தளத்தில் பதிவு செய்தால் தான் அனுமதி என்ற நிலை. உடனே நான் அம்ஜத் கானை தொடர்பு கொண்டு விபரங்களை எடுத்துச் சொன்னேன். உடனடியாக ஒரு சில மணிநேரத்தில் அனைத்து பெயர்களும் இக்குழுவின் தகவல் தொழில் நுட்ப பிரிவால் பதிவேற்றம் செய்யப்பட்டு அந்த பேருந்து தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டது.
கர்மமே கண்ணாயிரம் என்று இடைவிடாமல் உழைத்த இந்த சகோதர சகோதரிகளுக்கு இறைவன் இம்மை மறுமை நற்பேறுகளை வழங்குவானாக. இதே போல் தங்கள் பாணியில் இப்பணியில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் வல்ல ரஹ்மான் அருள் பாலிப்பானாக.
தமிழக தப்லீக் அன்பர்களை ஏற்றிக் கொண்டு ரயில் தமிழகத்திற்கு மே 16 அன்று புறப்படும் என்று தமிழக அரசு தரப்பில் மே 9 ம் தேதி சொல்லப்பட்டு அதில் வரும் அனைத்து பயணிகளுக்குமான கட்டணத்தை மே 14ம் தேதி அன்று செலுத்திய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஒ.பி.எஸ் ரவீந்தரநாத் அவர்களுக்கும் நன்றி.
இப்பணியில் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்ட தமிழக அரசின் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றி.
டெல்லி மற்றும் வட மாநிலங்களிலிருந்த தப்லீக் சகோதரர்கள் குறிததும் அவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும் விரிவாக செய்தி வெளியிட்;ட இந்து தமிழ் நாளிதழ் மற்றும் அதன் டெல்லி சிறப்பு செய்தியாளர் ஆர. ஷபி முன்னா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
கொரோனாவை பரப்பியவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட எம் தப்லீக் தோழர்கள் இன்று டெல்லியில் கொரோனவிலிருந்து மனிதர்கள் உயிரைக் காப்பாற்ற பிளாஸ்மாவிற்கு தங்கள் உதிரத்தை அளித்து மாவீரர்களாகத் தாயகம் திரும்பியுள்ளார்கள்.