கொரோனா பாதிப்பில்லாத பகுதியாக மாறிய மேலக்காவேரி கயித்துக்காரத்தெரு பகுதி!

Share this News:

கும்பகோணம் (17 மே 2020): கொரோனா பாதிப்பில்லாத பகுதியாக முழுமையாக மாறியது மேலக்காவேரி கயித்துக்காரத்தெரு பகுதி. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த கயித்துக்காரத்தெருவை சேர்ந்த அனைவரும் வீடு திரும்பியதால் பொதுமக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோயால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் 28 நாட்கள் முடிவுற்று, புதிய தொற்றுகள் ஏற்படாமலிருந்தால்
அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து விடுவிக்கவும் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ம.கோவிந்த ராவ் அண்மையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி மேலக்காவேரி கயித்துக்காரத்தெரு, செக்கடி சந்து, சர்வமான்ய தெரு பகுதியில் ஏப்ரல் 16ந் தேதிக்கு பிறகு புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பதால், 28 நாட்கள் காலக்கெடு (மே14) வியாழக்கிழமையுடன் நிறைவடைந்து விட்டது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து கயித்துக்காரத்தெரு, செக்கடி சந்து, சர்வமான்ய தெரு பகுதியை முழுமையாக விடுவிக்கவும், பாதிப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை முழுமையாக அகற்றவும் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இன்று மேலக்காவேரி கயித்துக்காரத்தெரு செக்கடித்தெரு, சர்வமான்ய தெரு பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து தளர்வு செய்து முழுமையாக தடுப்புகள் அகற்றப்பட்டது.

மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சியர், கும்பகோணம் சார் ஆட்சியர், நகராட்சி ஆணையர், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினர், காவலர்கள், வருவாய்த்துறையினர், தூய்மைப்பணியாளர்கள், உள்ளூர் தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவரின் தன்னலமற்ற பேரிடர் கால பணியை நன்றி கூறி மேலக்காவேரி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Share this News: