சென்னை (23 ஜூலை 2020): “ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து வாய் திறக்காதது ஏன்?” என்று ரஜினிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் கடவுளான முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் கொச்சையாக சித்தரித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் காணொலி ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோ பதிவிற்கு இந்து அமைப்பினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் கறுப்பர் கூட்டம் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, வேளச்சேரி செந்தில்வாசன்(49), நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திர நாகராஜன் ஆகியோரை கைது செய்தனர். கறுப்பர் கூட்டம் யூடூப் சேனல் அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ரஜினி பரரப்பு ட்வீட் ஒன்றை வெளியிட்டார். அதில். “கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… எல்லா மதமும் சம்மதமே!! கந்தனுக்கு அரோகரா!!” என குறிப்பிட்டு இருந்தார்.
இதனை முன்வைத்து ரஜினிகாந்துக்கு காங்கிரஸ் கட்சியின் கரூர் லோக்சபா தொகுதி எம்.பி. ஜோதிமணி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதில், ரஜினிகாந்த் அவர்களே தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 70%, இந்திய அளவில் 52%. அவர்களின் இடஒதுக்கீட்டை ரத்துசெய்திருப்பதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவில் மண் அள்ளிப் போட்டிருக்கிறது பிஜேபி அரசு. அவ்வப்போது கருத்துச் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ள உங்களுக்கு இது பற்றி கருத்தே இல்லையா? அல்லது மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா? என பதிவிட்டுள்ளார்.