சென்னை (23 ஜூலை 2020): தமிழகத்தில் பிளாஸ்மா தானம் மூலம் கொரோனா சிகிச்சை வெற்றி அடைந்திருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்து பேசிய விஜயபாஸ்கர், “பிளாஸ்மா நன்கொடையாளர்கள் 2 பேர் இன்று பிளாஸ்மா தானம் அளித்து தொடங்கியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இந்த பிளாஸ்மா வங்கியில் 7 பேர் தானம் அளிக்கக் கூடிய வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால், தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருக்கிறது.” என்றார்.
மேலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையைத் தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், திருச்சி, மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த பிளாஸ்மா வங்கிகள் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.