சென்னை (27 ஜூன் 2021): மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்த, புதிய நிர்வாகிகளை அதன் தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே “மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்த, தேவையான மாற்றங்களைச் செய்வேன்!” என கடந்த மே 24ஆம் தேதி வீடியோ வாயிலாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (26.06.2021) இணையவழி கலந்துரையாடலில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார்.
அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், ”நம்மைப் படகாக்கி தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ள விரும்பும் சதிகாரர்களுக்கு கட்சியில் இடமில்லை. கட்சிக்குத் துரோகம் செய்பவர்கள் சகித்துக் கொள்ளப்பட மாட்டார்கள். வரும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க செய்வோம். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தயார்” என பேசினார்.
மேலும் புதிய நிர்வாகிகளாக, பழ. கருப்பையா – அரசியல் ஆலோசகர்; பொன்ராஜ் வெள்ளைச்சாமி – அரசியல் ஆலோசகர்; ஏ.ஜி. மௌரியா – துணைத்தலைவர், கட்டமைப்பு; தங்கவேலு – துணைத்தலைவர், களப்பணி மற்றும் செயல்படுத்துதல்; செந்தில் ஆறுமுகம் – மாநிலச் செயலாளர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் செய்தித் தொடர்பு; சிவ. இளங்கோ – மாநிலச் செயலாளர், கட்டமைப்பு; சரத்பாபு – மாநிலச் செயலாளர், தலைமை நிலையம்; ஸ்ரீப்ரியா சேதுபதி – நிர்வாகக் குழு உறுப்பினர்; ஜி. நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர் என புதிய நிர்வாகிகள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.