திமுக நிர்வாகிகள் மீது கனிமொழி திடீர் பாய்ச்சல்!

Share this News:

சென்னை (27 மார்ச் 2021): திமுகவினரின் சர்ச்சையான பேச்சுக்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசியவர் ஒருகட்டத்தில், “அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை; எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவ குழந்தை. அந்தக் குறைப்பிரசவ குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர் தேவைப்பட்டார், அவர்தான் பிரதமர் மோடி” என தனது பேச்சில் குறிப்பிட்டார். ஆ.ராசாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல தேர்தல் பிரச்சாரத்தில் ஐ.லியோனியின் பேச்சுக்கு தான் வருத்தம் தெரிவிப்பதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள கார்த்திகேய சிவசேனாதிபதி, ”தேர்தல் பிரச்சாரத்தில் ஐ.லியோனி சொன்ன உதாரணத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். நாட்டு மாட்டு பால் நல்லது என்று கூறியிருக்கலாம். அதை விடுத்து அந்த உதாரணம் தேவையற்றது” என தெரிவித்துள்ளார்.

திமுக முக்கிய நிர்வாகிகள் இப்படி சர்ச்சையாக பேசியிருக்கும் நிலையில், திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி, தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லாருமே மனதில் வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும், பெரியாரும் விரும்பிய சமூக நீதி” என்று பதிவு செய்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *