மதுரை (15 ஜன 2020): மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் போலீசார் தடியடி பிரயோகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் , மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிடாோர் அடங்கிய குழுவினர் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வருகிறது. மாலை 4 மணிவரை நடைபெறும் இந்தப் போட்டிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டி காளைகள் பதிவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர். 730 காளைகள் பதிவானதாக காலையில் அறிவித்தனர். காளைகளுக்கு வழங்கியுள்ள டோக்கன் முறையில் குளறுபடி நடந்திருப்பதாக காளைகளின் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். ஒரே எண்ணில் இரண்டு அட்டைகளை விநியோகித்து முறைகேடு நடந்திருப்பதாக காளை உரிமையாளர்கள் புகார் கூறினர்.
இந்நிலையில் இது தொடர்பாக காளை உரிமையாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் ஆவேசமாகக் குரல் எழுப்பி அதிக அளவில் கூட்டம் கூடியது. இதனால், லேசான தடியடி நடத்தி காவலர்கள் கூட்டத்தைக் கலைத்தனர்.
இதுவரை நடைபெற்ற சுற்றுகளின் முடிவில் 16 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.