சென்னை (09 டிச 2022): மாண்டஸ் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவுக்கு பிறகு தீவிர புயலாக வலுப்பெற்றது.
இது இன்று காலை வரை தீவிர புயலாக இருந்து, பின்னர் மீண்டும் புயலாக வலுவிழந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கும்.
இதனை தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவில் காரைக்காலில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மேலும், புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. புயல் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக சென்னையில் மிகவும் குளிர்ச்சியான சூழ்நிலையும் நிலவி வருகிறது. கிண்டி, மாம்பலம், சைதாப்பேட்டை, ஈக்காட்டு தாங்கல், எழும்பூர், சென்னை சென்ட்ரல் உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. சென்னையில் மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.