சென்னை (08 ஏப் 2020): நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில், கடந்த மார்ச் 24ம் தேதி விதி எண்.110ன் கீழ் அறிவித்தார்.
இந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசாணையில்,” முதல்வரின் அறிவிப்புக்கு இணங்கவும், அரசு முதன்மை செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட பரிந்துரை அடிப்படையிலும், தற்போது இருக்கும் நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி, சேலத்தில் இருந்து எடப்பாடி, நாகப்பட்டினத்திலிருந்து மயிலாடுதுறை போன்ற மூன்று புதிய மாவட்டங்கள் இந்த ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன.
கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் வேலூர் மாவட்டத்தை வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை போன்ற மூன்று மாவட்டங்களாக தமிழக அரசு பிரித்தது. அதற்கும் முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், செங்கல்பட்டு (காஞ்சிபுரம்), தென்காசி (திருநெல்வேலி) ஆகிய இரண்டு புதிய மாவட்டங்களை தமிழக அரசு அறிவித்தது .
மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதன் மூலம், கடந்த ஒரு வருடத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஆறு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.