சென்னை (08 ஏப் 2020): கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் தடுப்பு பணிகளுக்காக பெரிய அளவில் நிதி தேவைப்படுவதால் பிரதமரும், பல மாநில அரசுகளும் பொதுமக்கள், பிரபலங்கள், நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க வேண்டுகோள் விடுத்தனர்.
அதே போல, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அளிக்கப்படும் நிதிக்கு 100% வரி விலக்கு உண்டு என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள், கட்சிகள், அமைப்புகள், நிறுவனங்கள், பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் நிதியளித்து வருகின்றனர்.
அந்த வரிசையைல், தமிழ் சினிமா உலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ‘தல’ அஜித் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.1.25 கோடி நிதி அளித்துள்ளார்.
நடிகர் அஜித் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கு ரூ.50 லட்சமும் மத்திய அரசுக்கு ரூ.50 லட்சமும், படப்பிடிப்பு இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ள திரைப்படத் துறையைச் சேர்ந்த பெப்சி தொழிலாளர்களுக்காக ரூ.25 லட்சம் ரூபாய் என மொத்தம் ரூ.1.25 கோடி நிதி வழங்கியுள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.12,200 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு வெறும் ரூ.510 கோடியை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.