திருநெல்வேலி (11 மே 2020): 47 நாட்களுக்குப் பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்கள்தான் பீதியில் உள்ளனர்.
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு இன்று முதல் 34 தொழில்சார்ந்த கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் அதிகாலையிலேயே டீ கடைகள் திறக்கப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் முதல் நாளில் சுமார் 65 விழுக்காடு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுபோன்று நெல்லையில் அனைத்து நகைக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
நெல்லை டவுன் கூலக்கடை பஜாரில் 400க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் திறக்கப்பட்டு வியாபாரத்தை தொடங்கி உள்ளன. மேலும் எப்போதும் பரபரப்பாக இயங்கும் டவுன் நான்கு ரத வீதிகளிலும் நடைபாதை கடைகளான தள்ளுவண்டி துணிக் கடைகள், செருப்புக் கடைகள், கவரிங் கடைகள், வெள்ளரிக்காய் மற்றும் பழக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.
மேலும் உலசர் சலவை நிலையங்கள், மினசாதன பழுபார்க்கும் கடைகள், எலக்ட்ரிக் கடைகள் உள்ளிட்ட 34 வகையான கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. 47 நாட்களுக்கு பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது இப்படியிருக்க ஒரு புறம் தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் இந்த நேரத்தில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், சமூக இடைவெளி சரிவர கடைபிடிக்கப்படாமல் போனால் மேலும் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.