சென்னை (12 மார்ச் 2020): மீன் சாப்பிட்டால் நூறு வருஷம் வாழலாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை என்பது வெறும் வதந்தி என்றும், அதை நம்ப வேண்டாம் என்றும் கூறினார்.
மதுரையில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்ட மீன்களில் ரசாயனம் தடவியிருந்தது தெரியவந்ததை அடுத்து, உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் தரமான மீன்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மீன் சாப்பிட்டால் 100 ஆண்டுகள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழலாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.