டாஸ்மாக்கில் காட்டும் ஆர்வம் பொதுமக்கள் மீது இல்லை – மக்கள் நீதி மய்யம்!

Share this News:

சென்னை (18 ஆக 2020): டாஸ்மாக்கில் காட்டும் ஆர்வம் பொதுமக்கள் மீது இல்லை என்று மக்கள் நீதிமய்யம் தொழிலாளர் அணி தெரிவித்துள்ளது,

இதுகுறித்து அதன் மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவிட்-19 நோய் தொற்று காரணமான ஊரடங்கு ஐந்தாவது மாதத்தை கடந்து செல்லவிருக்கும் சூழலில் மக்களின் இயல்பு வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு கிஞ்சித்தும் இருப்பதாக தெரியவில்லை.

ஏனெனில் கடந்த ஐந்து மாதங்களாக குண்டூசி தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கி விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வரையிலும், ஆன்மீக வழிபாட்டுத் தலங்கள் முதல் கேளிக்கை பூங்காக்கள், சுற்றுலா மையங்கள், திரையரங்க வளாகங்கள் வரையிலும், ஆட்டோ முதல் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து வரையிலும் இன்னும் செயல்படாத நிலையே நீடிக்கிறது.

ஊரடங்கில் தளர்வுகள் எனும் பெயரில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளோடு சில தொழிற்சாலைகளையும், ஆட்டோக்களையும் இயங்கிட அனுமதித்திருந்தாலும் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து முற்றிலுமாக இயக்கப்படாத சூழலில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வர அவர்கள் படும் அவஸ்தைகள் என்பது சொல்லிமாளாது.

ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளால் தொழிற்சாலைகள், பல்வேறு பெரிய, பெரிய வணிக நிறுவனங்கள் எல்லாம் இயங்காததால் தொழிலாளர்கள் வேலை உறுதியின்றி, வருமானம் இழந்து தவித்து வருவதை உலகறியும்.

இந்த பேரிடர் காலத்தில் கொரோனா நிவாரண நிதியாக இரண்டாயிரம் ரூபாயும், சில மாதங்கள் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணை உள்ளிட்ட சமையல் பொருட்களை சொற்ப அளவில் கொடுத்து விட்டு அதனை அவர்களிடமிருந்து வட்டியோடு திரும்ப வசூலிக்க உயிரைக் கொல்லும் சாராயத்தை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளை திறந்து வியாபாரம் செய்யும் பணியை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜரூராக நடத்தி தொழிலாளர்களின் குடும்பத்தில் மிச்சமிருந்த சேமிப்பையும், தாய்மார்கள் கழுத்தில் இருந்த குண்டுமணி தங்கத் தாலியையும் பிடுங்கி கொள்ளத் தொடங்கியது வேதனைக்குரியது.

மக்களுக்கான அரசு என மார்தட்டிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அதிமுக அரசு ஊரடங்கை முடிவிற்கு கொண்டு வர பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்தை முழுமையாக இயக்கிடவும், அனைத்து வழிபாட்டு தலங்களையும், பூங்காக்களையும் திறந்து மக்கள் வழக்கம் போல் சென்று வரவும் அனுமதியளிக்க தவறி விட்டு டாஸ்மாக் கடைகளை திறக்காத மாவட்டங்களில் அவசர, அவசரமாக திறக்க முற்படுவதை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தொழிற்சாலைகளும், பொது போக்குவரத்தும் முழுமையாக செயல்பட்டால் கொரோனா நோய் தொற்று பரவிடும், வழிபாட்டு தலங்கள் திறந்திருந்தாலும் அந்நோய் தொற்று மக்களை கடுமையாக பாதிக்கும் என்றால் உயிரைக் கொல்லும் சாராயத்தை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் மூலம் மட்டும் கொரோனா பரவாது என்கிற தமிழக அரசின் எண்ணம் “நாய் விற்ற காசு குறைக்காது” எனும் பழமொழியையே நினைவூட்டுகிறது.

எனவே டாஸ்மாக் கடைகளை திறப்பதில் காட்டும் ஆர்வத்தில் பாதியளவேனும் மக்கள் நலனிலும், மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதிலும் கவனமெடுத்து தமிழக அரசு அக்கறை கொள்ள வேண்டும். அதற்கு பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகளையும், அனைத்து தொழில் நிறுவனங்களையும், திரையரங்க வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா மையங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக துவக்கி மக்களின் இயல்பு வாழ்க்கை தங்குதடையின்றி நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply