சேலம் (18 ஆக 2020): சேலத்தில், விசாரணை என்ற பெயரில் லட்டியால் கண்மூடித்தனமாக தாக்கியதில், 83 வயது முதியவரின் கை முறிந்துள்ளது மேலும் அவருடைய மகனுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது,.
சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் அருகே உள்ள அரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (83). இவருடைய மகன் ராஜூ (53). இவர்களுக்கு அதே பகுதியில் 2.60 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களின் அனுபவ பாத்தியதையில் இருந்து வருகிறது. இவர்களது நிலம் அருகே, உத்தமசோழபுரம் ஊராட்சி மன்றத் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் விவசாய நிலம் இருக்கிறது.
இவர்கள் இருவரின் நிலத்திற்கு இடையே கஞ்சமலை அடிவாரத்தில் இருந்து தொடங்கி ஆத்துக்காடு பகுதி வரை நீண்டு செல்லும் ஓடை ஒன்று உள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெருமாள், கொஞ்சம் கொஞ்சமாக ஓடையை ஆக்கிரமித்து வருவதாக ராஜூ தரப்பு சொல்ல, அவர்களுக்குள் கடந்த சில ஆண்டுகளாகவே நிலத்தகராறு இருந்து வருகிறது.
இது தொடர்பாக பெருமாள் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் சொல்ல, ராஜூவையும் அவருடைய தந்தையையும் விசாரணைக்கு அழைத்துள்ளது காவல்துறை. ஆனால் அங்கே கேள்வி எதுவும் கேட்காமல், அவர்களை பார்த்த மாத்திரத்திலேயே ஃபைபர் லட்டியால் ‘கடுமையாக தாக்கியுள்ளார் எஸ்ஐ ராமகிருஷ்ணன். இதில் முதியவர் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது மகன் ராஜுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.