தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த சீமான்!

Share this News:

சென்னை (23 மே 2020): இஸ்லாமியக் கூட்டமைப்பு தலைவர்கள் சீமானை சந்தித்ததை தொடர்ந்து, சீமான் மீது கடந்த ஒரு வாரமாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது.

நேற்று 22-05-2020 வெள்ளிக்கிழமை மாலை, ‘நாம் தமிழர்’ கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை, இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.

சுமார் 1 1/2 மணி நேரம் நடைபெற்ற இச் சந்திப்பில், பல்வேறு விஷயங்கள் மனம் விட்டு பேசப்பட்டன. எழுப்பப் பட்ட கேள்விகள் குறித்து சீமான் விளக்கம் அளித்தார்.

சமீபத்தில் ‘நாம் தமிழர்’ கட்சியைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவரின் திருமணம் குறித்து சமூக வலையுலகில் பெரும் சர்ச்சை வெடித்தது.  இதில் சீமான் குறித்தும் நாம் தமிழர் கட்சி குறித்தும் எழுந்த பல்வேறு விவாதங்களுக்கு இந்த சந்திப்பு விடையளித்துள்ளது.

இந்த கலந்துரையாடலில் ‘தமிழம்’ என்ற பெயரில் தனி மதம் உருவாக்கியிருப்பதாக சீமானின் சமீபத்திய உரை மேற்கோள் காட்டப்பட்டது.

“இத்தகைய தனி மதம், முஸ்லிம்களின் ஓரிறைக் கொள்கைக்கு எதிரானது” என்பதைச் சுட்டிக் காட்டி முஸ்லிம் தலைவர்கள் சீமானிடம் பேசினார்கள். இதற்கு பொறுமையாக விளக்கம் அளித்து பேசினார் சீமான்.

மேலும் “என் மீதும் ‘நாம் தமிழர்’ கட்சி மீதும் வைக்கும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் எல்லாம் மேலோட்டமாக பார்த்து அவரவர் கருத்துக்களை முன்வைப்பது உண்மைக்கு புறம்பானது, பொய்யானது மேலும் கற்பனையானது. நான் எப்போதும் எந்தக் காலகட்டத்திலும் முஸ்லிம்கள் உடன் துணை நிற்பேன்” என்று ஆணித்தரமாக வலியுறுத்தி சந்திப்பை நிறைவு செய்தார் சீமான்.

சீமானுடனான இச் சந்திப்பில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் முஹம்மது சித்திக், தமுமுக பொது செயலாளர் ஹாஜா கனி, மமக துணை பொதுச் செயலாளர் யாக்கூப், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மன்சூர் காஷ்பி ஹஜரத், ஜமாத்துல் உலமா மூத்த தலைவர் தர்வேஷ் ரஷாதி ஹஜரத், எஸ்டிபிஐ பொதுச் செயலாளர் அச உமர் பாருக், எஸ்டிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் கரிம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப், மமக காஞ்சி மாவட்ட பொருளாளர் இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.


Share this News: