சென்னை (23 மே 2020): சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மடிப்பாக்கம் அடுத்த உள்ளகரம் மண்டபம் இணைப்பு சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் சிவக்குமார்(59). இவர் சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி பின்புறம் உள்ள அன்புக்குறிய அம்மன் கோயிலில் அர்ச்சகராக உள்ளார்.
நேற்று முன்தினம் சிவகுமார் வீட்டின் பகுதியில் வசித்து வந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
உடனே பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இச்சம்பவம் குறித்து மடிப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ச்சகரை தேடி வந்தனர்.
இதற்கிடையே உண்மை வெளியே தெரிந்துவிட்டதால் அங்கிருந்து தப்பித்து ஓடிவிடலாம் என சிவகுமார் நினைத்துள்ளார். இதனை அறிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர்கள், அவரை வீட்டில் வைத்து பூட்டி விட்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டிற்குள் கையும் களவுமாக சிக்கிய சிவக்குமாரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
பின்னர் மகளிர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டதும் சிறுமியிடம் தவறுதலாக நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அதன் அடிப்படையில் அர்ச்சகர் சிவக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.