சென்னை (04 டிச 2022): மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் நுகர்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நுகர்வோர் வசதிக்காக புதிய இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின்கட்டணம் செலுத்த முடியும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மின்நுகர்வோர் அனைவரும் ஒரே சமயத்தில் மின்வாரிய இணையதளத்தில் மின் இணைப்புடன், ஆதாரை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் மின்வாரிய இணையதளத்தின் சர்வர் முடங்கியது. அத்துடன், மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, நவ.28-ம் தேதி முதல் இம்மாதம் 31-ம் தேதி வரை மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்வர் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுவதால், ஆன்லைன் மூலம் ஆதாரை இணைக்க முடியாமல் நுகர்வோர் சிரமப்படுகின்றனர். இதனால் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் புதிய இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது.
அதன்படி, https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதளத்தில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை எளிதில் இணைக்கலாம்.