தஞ்சாவூர் (12 பிப் 2022): தஞ்சாவூரில் கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படும் 3 இஸ்லாமியர்கள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்துன் தொடர்புள்ளதாக கூறப்படும் அப்துல் காதர் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், இவர், சமூக வலைத்தளங்களில் இந்துக்களை பற்றி அவதூறாக கருத்துக்களை பதிவிட்டு வருவதாகவும், இது மதமோதல்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருந்ததால், மத மோதல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், அவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இவரைத் தொடர்ந்து மண்ணை பாபா என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த இயக்கத்தில் தொடர்புடையதாகக் கூறி தஞ்சை கீழவாசல் மகர் நோம்புசாவடி தைக்கால் தெருவை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் காதர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முகமது யாசின், தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காவேரி நகர் பகுதியை சேர்ந்த அகமது ஆகியோர்களது வீட்டில் தேசிய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சுமார் ஐந்து மணி நேரம் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது, அவர்களிடம் இருந்து, மொபைல் போன், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்பட சில ஆவணங்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
முன்னதாக சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் என்ஐஏ அதிகாரிகளை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், கூட்டத்தை கட்டுப்பத்தி, திருப்பி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து என்ஐஏ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட முகமது யாசின் மற்றும் காதர் கூறுகையில், அதிகாரிகள் காலை 5.30 மணியளவில் வந்து சோதனை செய்தனர். சோதனை செய்வதற்கு அனைத்தும் ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக கூறினார்கள். மேலும் எதுவும் இங்கிருந்து எதையும், எடுத்து செல்லவில்லை. தங்களுடைய மொமைல் போன், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டைகளை மட்டும் எடுத்து சென்றனர் என தெரிவித்தனர்.