நாகர்கோவில் (20 ஏப் 2020): நாகர்கோவில் அருகே கொரோனாவால் தனிமைப் படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் உணவின்றி தவிப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளாடிச்சிவிளையில், கொரோனா பாதித்த இருவர், கடந்த 2 வாரங்களுக்குமுன் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.
இவர்களுக்கு மாநகராட்சி மூலம் உணவு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், வாட்ஸ் அப் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடு வீடாக அத்தியாவசியப் பொருட்களை கொடுப்பதாகச் கூறித்திரியும் அதிகாரிகள், இதுவரை எதையும் வழங்கவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.