புதுடெல்லி (20 ஏப் 2020): உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, இன்றுமுதல் விவசாயம் மீன்பிடி தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, பல்வேறு மாநிலங்களில் 26 நாட்களுக்கு பிறகு இன்று தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்ததால், மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, அடுத்த மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்தது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் திரு. நரேந்திரமோடி, இன்றுமுதல் சில தளர்வு கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.
உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, இன்றுமுதல் விவசாயம் தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழில், ஆன்லைன் வர்த்தகம், 50 சதவீத ஊழியர்களுடன் ஐ.டி. நிறுவனங்கள் செயல்படவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், கிராமப்புற தொழிற்சாலைகள் இயங்கவும், 100 நாள் வேலை திட்டம் மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கிசாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் என்பன உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், மதுபான கடைகள், விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு பூங்கா மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கான தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சில மாநிலங்களில் இதுபோன்ற தளர்வுகள் கொண்டுவரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.