கோவை (12 பிப் 2020): தொடரும் தீண்டாமை கொடுமை காரணமாக கோவையில் 430க்கும் அதிகமான தலித்துகள் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, சிக்கதாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் தீண்டாமை சுற்றுச்சுவர் இடிந்தது. இந்த சுற்றுச்சுவர் அருகிலுள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததில், அங்கு வாசித்த 10 பெண்கள், 3 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இறந்த அனைவரும் அருந்ததியர் இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
இந்நிலையில் அருந்ததியருக்கு உரிய சுயமரியாதை இந்து மதத்தில் அளிக்கப்படவில்லை என்பதால் 3000 அருந்ததி இன மக்கள் இஸ்லாம் மதத்தை தழுவுவதாக அறிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட 430 பேர் வரை தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர். முதலில் மார்க்ஸ் என்பவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அவரது பெயரை அபூபக்கர் என மாற்றிக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து சரத்குமார் என்பவர், இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அவரது பெயரை அப்துல்லா என மாற்றிக் கொண்டார். இப்படி இதுவரை 430 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர்.
இதுகுறித்து அப்துல்லா தெரிவிக்கையில், “இந்துக்களாக இருந்தவரை, எங்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை, தேநீர் கடையில் பாகுபாடு, இப்படி பல இன்னல்களை சந்தித்தோம், ஆனால் இஸ்லாம் மதத்திற்கு மாறியவுடன், ஐந்து வேளை மசூதிக்குச் செல்கிறோம், எந்த பாகுபாடும் இல்லை, எல்லா முஸ்லிம் வீடுகளுக்கும் செல்கிறோம்” என்றார்.
இதற்கிடையே மேலும் பலர் இஸ்லாம் மதத்திற்கு மாறவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.