முன்னாள் முதல்வர்கள் மீது பொது பாதுகாப்பு சட்டம் – ப.சிதம்பரம் அதிர்ச்சி!

Share this News:

சென்னை (07 பிப் 2020): ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, சர்தாஜ் மதானி உள்ளிட்ட தலைவர்கள் மீது பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளமை அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்னும் காஷ்மீர் ராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது.

அப்போது தொடங்கிய பிரச்சனை இன்னும் முடியவில்லை. அங்கு 144 அறிவிக்கப்பட்டது, அதோடு மாநிலம் முழுக்க மொத்தமாக நிறைய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும் உமர் அப்துல்லா உட்பட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இணைய பயன்பாட்டுக்கு தடை, செல்போன் சேவைகள் துண்டிப்பு, ஊரடங்கு உத்தரவுகள் ஆகியவையும் அமல்படுத்தப்பட்டன. இன்னும் அங்கு அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில்தான் இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டு காவலில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, சர்தாஜ் மதானி உள்ளிட்ட தலைவர்கள் மீது பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்களின் வீட்டு காவலை நீட்டிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் 6 மாதங்களுக்கு இவர்கள் எந்த வித விசாரணையுமின்றி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பார்கள். இதற்கு முன்பே ஃபரூக் அப்துல்லா மீது இந்த சட்டம் பாய்ந்தது. அதன்பின் இந்த சட்டம் கடந்த ஜனவரியில் அவருக்கு நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் எம்பி ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் செய்துள்ள டிவிட்டில், ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, சர்தாஜ் மதானி உள்ளிட்ட தலைவர்கள் மீதும் பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்து பெரிய அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.

குற்றச்சாட்டுகள் இல்லாமல் ஒருவரை கைது செய்து வீட்டில் வைப்பது ஒரு ஜனநாயகத்தில் மிக மோசமான அருவருப்பான செயல் என்பதை மறக்க வேண்டாம். நீதியற்ற சட்டங்கள் கொண்டு வரப்படும் போதும், நீதியற்ற சட்டங்கள் நடைமுறைபடுத்தப்படும் போதும் மக்களுக்கு போராடுவதை தவிர வேறு என்ன வழி இருக்க முடியும்.

மக்களுக்கு அமைதியாக போராடுவதே ஒரே வழி. போராட்டம் செய்தால் கலவரம் ஏற்படும், பாராளுமன்றத்தில் நிறைவேறிய சட்டங்களை மக்கள் மதிக்க வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் அவர் வரலாற்றை மறந்துவிட்டார். மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங். நெல்சன் மண்டேலா ஆகியோரின் போராட்ட வரலாறை மறந்துவிட்டார்.

நீதியற்ற சட்டங்களை அமைதியான போராட்டம் மூலமும், ஒத்துழையாமை இயக்கம் மூலமும் எதிர்க்க வேண்டும். அதுதான் சத்தியாகிரகம் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply