திருவனந்தபுரம் (07 பிப் 2020): பிரபல பாடகர் கேஜே யேசுதாஸின் சகோதர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாடகர் கேஜே யேசுதாஸ். கேரள மாநிலம் கொச்சினை பூர்விகமாக கொண்டவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட பெரும்பாலான இந்திய மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். அவரது மகனாக விஜய் யேசுதாஸ் பாடகராகவும் நடிகராகவும் உள்ளார்.
இந்நிலையில் கே.ஜே.யேசுதாசின் இளைய சகோதரர் கே.ஜே.ஜஸ்டின். 62 வயதான இவர் கேரளா மாநிலம் காக்கநாடு பகுதியில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி இரவு கேஜே. ஜஸ்டின் காணாமல் போனதாக தெரிகிறது. இதுகுறித்து கேரள போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கேஜே ஜஸ்டின் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், கொச்சி நகரின் வல்லார்படம் பகுதியில் ஆற்றங்கரையோரம் ஜஸ்டின் வயதையொத்த ஒருவரது சடலம் மிதந்துக் கொண்டிருப்பதாக திரிக்ககர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்தவர் ஜேசுதாஸின் சகோதரர் தான் என அடையாளம் காணப்பட்டது.
பின்னர் அவரது சடலத்தை எர்ணாகுளத்தில் உள்ள பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் நிலைய அதிகாரி சுனு கூறும்போது, ஜஸ்டினுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு இருந்தது. அதனால் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், அவர் உயிரிழந்தது பற்றிய உண்மையான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என கூறியுள்ளார்.