சமூக பொருளாதார அடிப்படையில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

Share this News:

சென்னை (03 டிச 2022): சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள லயோலா கல்லூரியின் லிபா வளாகத்தில் வர்த்தக மேலாண்மை துறை சார்பில் திராவிட மாடல் வர்த்தக முன்னேற்றம் மற்றும் மனித மேம்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “இடதுசாரி, வலதுசாரி நாடுகளுக்கு இடையிலான போட்டியாக உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. அனைவரும் சமம் என்பதே திராவிட மாடல். சாதி, மதம், இனம், பால் வேறுபாடு இன்றி அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிடியனிசம். திராவிட மாடலினால் பல்வேறு ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பதற்கான தரவுகள் உள்ளன. திராவிட மாடல் திட்டங்களை நிறைவேற்ற அமைப்பு ரீதியாக நாம் தயாராக இல்லை. திராவிட மாடல் இன்னும் அதன் முழு திறனை அடையவில்லை.

நாட்டின் 4 முன்னேறிய மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. சமூக பொருளாதார அடிப்படையில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. பல நாடுகளில் கல்வி, சுகாதாரம் முழுக்க முழக்க அரசால் வழங்கப்படுகிறது. ஹிமாசலப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் தேர்தலை முன்னிட்டு இலவச திட்டங்கள் தேர்தல் வாக்குறுதியாக பாஜக கொடுத்துள்ளது.

பள்ளிகளில் மதிய உணவோடு, காலை உணவும் வழங்கப்படுவது மாணவர்களின் ஊட்டசத்திற்கு உதவும். தாலிக்கு தங்கம் திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தாமல் இருந்ததால் அது பயனுள்ள ’புதுமைப் பெண்’ திட்டமாக மாற்றப்பட்டது. அதிக இருசக்கர வாகனங்கள் இருக்கும் மாநிலம் தமிழகம் தான். மொத்த குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 2.33 கோடி இங்கு இருக்கும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2.8 கோடி.

பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், பல பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். ஒரு வருடத்தில் ஒரு பெண், இலவச பயண திட்டத்தால் அடையும் பயனை, சமூக பொருளாதார அடிப்படையில் பார்த்தால், இது சாதனையாக இருக்கும். குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்குவது எதிர்காலத்திற்கான முதலீடு. நகைக்கடன் தள்ளுபடியில், ஒரு நபர் 100 சவரன்களை பல்வேறு வங்கிகளில் அடகு வைத்துள்ளதை கண்டறிந்தோம். சரியான தரவுகளின் மூலம் அரசாங்கம் இந்த முறைகேட்டை கண்டறிந்துள்ளது.

முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் 8 லட்சம் என்ற கிரிமினல் லேயரை ஏற்றுக்கொள்ள முடியாது. சரியான அளவில் கணக்கெடுப்பு எடுத்து சமூக ஏற்றத்தாழ்வு அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

தமிழகம் அதிக உயர்கல்வி படிப்பவரின் எண்ணிக்கையில் 53 சதவிகிதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் இங்கு தனியார் கல்லூரி, அரசு கல்லூரி, ஆண்கள் படிக்கும் கல்லூரி, பெண்கள் படிக்கும் கல்லூரி என நிறைய வேறுபாடுகள் உள்ளன. புதுமைப்பெண் திட்டமும், இலவச பஸ் பயண திட்டமும் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகிறது. உயர்கல்வியில் அவர்களுக்கு தரப்படும் 1000 ரூபாய், இடைநிற்றலை குறைத்து பெண்கள் கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். நான்காம் தலைமுறையாக இந்த இயக்கத்தில் பயணிப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன்” என்று பேசினார்.


Share this News:

Leave a Reply