சென்னை (24/07/2020):தமிழகத்தில் கொரோனா கோவிட்-19 நோய் தொற்றின் காராணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. நோய் தொற்றினை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மக்களை கொண்டு பெறப்படும் பிளாஸ்மா தானத்தின் மூலம் சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்காக சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா பிரித்தறியும் எந்திரம் தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
![Plasma Donation Camp Chennai 1](https://www.inneram.com/1669400953378/wp-content/uploads/2020/07/WhatsApp-Image-2020-07-24-at-13.14.17-212x300.jpeg)
சென்னையில் சமூக பணிக்குழு அறக்கட்டளை மற்றும் இராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையுடன் இணைந்து பிளாஸ்மா தானம் செய்வதற்கான தகுதி பரிசோதனை முகாம் எக்மோரில் உள்ள மலபார் முஸ்லிம் அசோசியேஷன் மஹாலில் இன்று நடைபெற்றது. கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட நபர்கள் முன்வந்து தகுதி பரிசோதனை செய்து கொண்டனர். இவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்பு கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பிளாஸ்மா சிகிச்சை வழங்க தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து பிளாஸ்மா தானம் பெறப்படும்.
இந்த முகாமை ஒருங்கிணைத்த சமூக பணிக்குழு அறக்கட்டளையை சார்ந்த DR.ஜியா, ஹமீத் மற்றும் சமீர் ஆகியோர் கூறும் போது..,
“தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் நோய் தொற்றின் அளவு அதிகரித்து வருகிறது. நோயால் பாதித்த மக்களின் பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உண்டாக்க ஏற்கனவே நோய் தொற்றில் இருந்து குணமடைந்த மக்களிடம் இருந்து பெறப்படும் பிளாஸ்மா அவர்கள் உடலில் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கான தேசிய மருத்துவ கழகத்தின் அனுமதி பெற்று தமிழகத்தில் அதற்கான சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் துவங்கப்பட்டுள்ளன.ஆனால் மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. அந்த நிலையை மாற்ற வேண்டும் குணமடைந்த மக்கள் பிளாஸ்மா தானம் செய்ய தாமாக முன்வந்து அரசுக்கும், நோயால் பாதிக்கப்பட்ட மக்களும் உதவிட வேண்டும் என்கிற நோக்கில் இந்த முகாம் நடத்தப்பட்டது.”
சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தொழில்நுட்ப குழுவினர் வந்து இரத்த மாதிரிகளை சேகரித்தனர். இந்த தகுதி பரிசோதனை முகாமை ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளர் அன்வர் பாதுஷா அவ்ர்கள் துவக்கி வைத்தார்கள். இதில் LIONS கிளப், UNWO மற்றும் CRF போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிகள் பங்கேற்றனர்.