சென்னை (10 அக் 2020): கொரோனா பரவல் சென்னையில் மீண்டும் அதிக அளவில் உள்ளதால் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்துக்கே கஷ்டப்படும் மக்களைக் காப்பாற்ற வேறு வழியில்லாததால் தளர்வுகளை அளித்துள்ளது தமிழக அரசு.
கொரோனா பரவல் நூற்றுக்கணக்கில் அதிகரித்துக் கொண்டிருந்த போது நாம் முழு பொதுமுடக்கத்தில் இருந்தோம். தற்போது அனுதினமும் ஆயிரங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது கொரோனா பாதிப்பு. இந்த சமயம் தளர்வுகளோடு இருக்கிறோம். எனில், நிலைமைக்கு ஏற்ப பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.
ஆனால், தலைநகர் சென்னையில் நிலைமை அப்படியில்லை. மீண்டும் மக்கள் அடர்த்தி நகருக்குள் வந்துவிட்டது. பார்க்குமிடமெங்கும் மாஸ்க்குகள் வீசியெறியப்பட்டு பேரிடரை மேலும் சிக்கலுக்குள்ளாக்கி வருகின்றன. கூட்ட நெரிசலோடுதான் பேருந்துகள் செல்கின்றன. தனிநபட் இடைவெளியின்மீது நம்பிக்கையின்மையே வந்துவிட்டது மக்களுக்கு என்பதைப் போல, கூழ் ஊற்றும் திருவிழாக்களும், கூட்டம் போடும் கட்சிகளும் நடந்து கொள்கின்றன. இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும்.
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் புதிதாக 5,185 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கயின், மாநிலத்தில் புதிதாக 5,185 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,288 பேர் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 மாவட்டங்களில், 34 மாவட்டங்கள் சேர்ந்து 80 சதவீதமும், சென்னை ஒரே மாவட்டம் மட்டும் 20% பாதிப்பையும் பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது.
இது இன்று மட்டும் என்றல்ல. தொடர்ந்து இதே நிலைதான் நீடித்து வருகிறது. மொத்த பாதிப்பின் பெரும் பங்கை சென்னை மட்டுமே கொண்டு விளங்குகிறது. இப்படியே நீடித்தால் மீண்டும் ஊரடங்கை நோக்கி நகர வேண்டிய நிலை சென்னைக்கு ஏற்படலாம் என்று ஆய்வாளர்களா தெரிவிக்கின்றனர்.
அதேபோல, சுகாதாரத்துறை தனது தரவுகளில் இனி சென்னையில் பதிவாகும் பாதிப்புகளை ஆட்களின் சொந்த ஊரை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த ஊர்களின் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.