சென்னை (22 பிப் 2020): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதற்கு விலக்கு கேட்டு நடிகர் ரஜினி மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு குறித்தும், போராட்டம் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, போராட்டக்காரர்களுக்குள் சமூக விரோதிகள் நுழைந்ததாக கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று ஆணையம் சம்மன் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதற்கு நடிகர் ரஜினிகாந்த் விலக்கு கேட்டு ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நடிகர் என்பதால் தூத்துக்குடி ஆணைய அலுவலகத்தில் ஆஜராகும்போது ரசிகர்கள் அதிகளவில் கூடிவிடுவார்கள். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும். அதனால் நேரில் ஆஜராக விலக்கு அளித்து கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயார் என்று அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.