சென்னை (07 பிப் 2022): ஆந்திர மாநில எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து பேசினார்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, ஆந்திர மாநிலம் மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் சாலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சருடன் பேசியதாகத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஆந்திர மாநிலத்தில் நான் எம்எல்ஏவாக இருக்கும் நகரி தொகுதியானது தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அவர்கள் மருத்துவ உதவிகளுக்காகச் சென்னைக்குத்தான் அதிகம் வருகிறார்கள்.
அவ்வாறு வருபவர்களுக்கு சில நேரம் எல்லைப்பகுதிகளில் அனுமதி கிடைப்பதில்லை எனவே எந்தத் தடையுமில்லாமல் அவர்கள் வந்து சேர உதவி செய்ய வேண்டும் என்றும், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு எல்லையில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு புத்தகங்களை வழங்கி உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருப்பதாகவும் கூறினார்.
மேலும், முதல்வர் என்னுடன் பேசும் போது நெடுநாள் பழகியவரைப் போல நட்புரிமையுடன் பேசினார். நான் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி கூறியுள்ளார் என ரோஜா கூறியுள்ளார்.
மேலும் ஆந்திரா, நகரி தொகுதி நெசவாளர்கள் தயாரித்த பட்டு சால்வையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியதாகவும் கூறிய ரோஜா, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் படம் பொறிக்கப்பட்ட சால்வையைச் செய்தியாளர்களிடம் காட்சிப்படுத்தினார்.