உடுப்பி (07 பிப் 2022): கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகளுக்கு ஆதரவாக தலித் மாணவர்கள் ஊதா துண்டு அணிந்து கொண்டு கல்லூரி வளாகத்திற்குள் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் பாஜக அரசை பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹிஜாபுக்கு எதிராக ஆர் எஸ் எஸ், பாஜக மாணவர் அமைப்பினர் காவி துண்டு அணிந்து கல்லூரிக்குள் நுழைந்தனர். இதனை கண்டிக்கும் வகையிலும் முஸ்லீம் மாணவிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், சிக்மகளூரில் உள்ள ஐடிஜிஎஸ் அரசுக் கல்லூரியில் தலித் மாணவர்கள் ஊதா துண்டு அணிந்து “ஜெய் பீம்” கோஷங்களை எழுப்பியபடி, கல்லூரிக்குள் வந்தனர்.
அதேபோல காவி துண்டு அணிந்து ஆர்எஸ்எஸ் மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். நீலம் மற்றும் காவி நிறத்தில் அணிந்திருந்த குழுக்கள் நேருக்கு நேர் வந்ததால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தலித் மாணவர்கள் ‘ஜெய் பீம்’ முழக்கங்களையும், டாக்டர் பிஆர் அம்பேத்கரை வாழ்த்தியும் கோஷம் எழுப்பினர். ஆர் எஸ் எஸ் குழுவினர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷங்களை எழுப்பியதால்,கல்லூரி வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே ஹிஜாப் அணிவது இந்திய அரசியலமைப்பின் 14 மற்றும் 25 வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்று அறிவிக்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு முஸ்லிம் மாணவர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு குறித்த விசாரணை பிப்ரவரி 8 அன்று நடைபெற உள்ளது.