பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடல் – முதல்வர் எடப்பாடி உத்தரவு!

Share this News:

சென்னை (15 மார்ச் 2020): கொரோனா பரவல் எதிரொலியாக, பாதுகாப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு வருகிற மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளிகள் மற்றும் (எல்.கே.ஜி, யு.கே.ஜி) தொடக்கப்பள்ளிகளுக்கு (1 ஆம் வகுப்பு முதல் முதல் 5 ஆம் வகுப்பு வரை) மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில எல்லைகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், வணிக வளாகங்கள், போன்ற மக்கள் கூடும் இடங்களில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

பொதுமக்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தேசிய பேரிடர் நிதியில் இருந்து 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *