சென்னை (19 பிப் 2020): சென்னை மற்றும் தமிழகமெங்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய கூட்டமைப்பு போராட்டம் நடத்துகின்றன.
இன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அடையாள அட்டை , தேசிய கொடியுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டபடி இஸ்லாமியர்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை திடீரென அறிவித்தார்.
அதன்படி சென்னையில் ரூ.15 கோடியில் ஹஜ் இல்லம் கட்டப்படும் என்றும், உலமாக்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தப்படும். உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் நிதி என்றும் அறிவித்தார்.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையிலும், மசூதிகளுக்கான பராமரிப்பு செலவு ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் நிலோஃபர் கபில் நன்றி கூறினார்.