திருவனந்தபுரம் (20 மார்ச் 2020): கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்தச் சூழலில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 206 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 47 பேரும், கேரளத்தில் 28 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் வைரஸ் பாதிப்பால் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் மஹாராஷ்டிராவை அடுத்து கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் கேரளாவில் நடைபெறவிருந்த பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.