கோவை (20 மார்ச் 2020): கொரோனா வைரஸ் குறித்து வீண் வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில், ஹீலர் பாஸ்கர் கொரோனா குறித்து பேசும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அதில் “இலுமினாட்டிகளின் திட்டமிட்ட சதிதான் கொரோனா. நம்முடைய மக்கள் தொகையைக் குறைக்கத்தான் இப்படிச் செய்கிறார்கள். ரசாங்கம்தான் விடுமுறை அளித்துள்ளது. நாம் நன்றாகத்தான் இருக்கிறோம். நோய் பாதிப்பு இல்லாதவர்களையும் அழைத்துச் சென்று, ஊசி போட்டு கொலை செய்கிறார்கள். எனவே, இந்த விநாடியிலிருந்து அரசு அதிகாரிகள், தங்களது மேலதிகாரிகள் சொல்வதைச் செய்யக் கூடாது.நமக்கு எது நல்லது என்று தெரிகிறதோ அதைத்தான் செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். மேலும், அந்த வீடியோவில் அமைச்சர்கள், அதிகாரிகளைக் கடுமையாக விமர்சித்திருந்தார். ஹீலர் பாஸ்கரின் இந்தக் கருத்து, பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருந்தது.
இந்நிலையில், ‘ஹீலர் பாஸ்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். மேலும், ஹீலர் பாஸ்கர் மீது சுகாதாரத்துறை கோவை துணை இயக்குநர் ரமேஷ் புகாரளித்திருந்தார். இதையடுத்து, கொரோனா குறித்து தவறான கருத்துகளைப் பதிவிட்டு, இணையதளத்தில் பரப்பிய குற்றத்துக்காக ஹீலர் பாஸ்கரைக் கோவை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்தனர்.
ஏற்கனவே வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வழிமுறை பயிற்சி முகாம் நடத்த இருந்ததற்காக, ஹீலர் பாஸ்கர் 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.